Saturday 1 October 2011

அல் கெய்தாவிற்கு அமெரிக்காவின் அடுத்த பேரடி

பின் லாடன் கொலைக்குப் பின்னர் அமெரிக்கா இன்னும் ஓர் பேரிழப்பை அல் கெய்தா இயக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முதல் தர தீவிரவாத எதிரியாகக் கருதப்படும் அமெரிக்கக் குடியுரிமையுடைய அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை யேமனில் வைத்து அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் செப்டம்பர் 30-ம் திகதி  யேமன் நேரம் காலை 9-55 அளவில் கொல்லப்பட்டார். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அல் அவ்லாக்கியைக் கொல்வதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிறப்பித்திருந்தார். இவரோடு இன்னொரு பாக்கிஸ்த்தனிய அமெரிக்கக் குடிமகன் சமீர் கான் என்னும் அல் கெய்தாவின் பத்திரிகை ஆசிரியரும் சவுதியைச் சேர்ந்த குண்டு தாயாரிப்பு வல்லுனரான இப்ராஹிம்  ஹசன் அல் அஸ்ரி என்பவரும் கொல்லப்பட்டனர். அன்வர் அல் அவ்லாக்கி இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தவர். இவர்களின் பத்திரிகையில் “Make a Bomb in the Kitchen of Your Mom.”  என்பன போன்ற கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன.

சவுதியைச் சேர்ந்த குண்டு தாயாரிப்பு வல்லுனரான இப்ராஹிம்  ஹசன் அல் அஸ்ரி நீருக்குள் வெடிக்கக் கூடிய குண்டுகளையும் தயாரிக்கக்  கூடியவர். இவரும் அன்வர் அல் அவ்லாக்கியுடன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட போதும் அவரின் இறப்பை யேமன் அரசு உறுதி செய்யவில்லை.

2002இல் அமெரிக்க விமானங்கள் அன்வர் அல் அவ்லாக்கி மீது ஒரு தாக்குதலை மேற் கொண்டன. இந்த ஆண்டு மே மாதம் 5-ம் திகதி அமெரிக்கா நடத்திய இரு தாக்குதல்களில் இருந்து அன்வர் அல் அவ்லாக்கி தப்பியிருந்தார். பின் லாடனைக் கொன்ற அதே குழுவினர்தான் அவ்லாக்கியையும் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.


அரேபிய தீபகற்பத்தில் ஒரு மறைமுக இடத்தில் இருக்கும் சிஐஏயின் தளத்தில் இருந்து ஏடன் வளைகுடாவைத் தாண்டி யேமனுக்குள் புகுந்த ஆளில்லா விமானங்களே தாக்குதல் நடாத்தியதாக நம்பப்படுகிறது.  சென்ற ஆண்டு சிஐஏ “YSD,” or the Yemen-Somalia Department என்ற ஒரு பிரிவை உருவாக்கி Al-Qaeda in the Arabian Peninsula எனப்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்பிற்க்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அன்வர் அல் அவ்லாக்கியின் கொலையை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்கப் படைத்துறையின் இணைந்த சிறப்பு நடவடிக்கைக் கட்டளையகமும்(Joint Special Operations Command) இணைந்து மேற் கொண்டன. சிஐஏ அண்மைக்காலங்களாக ஒரு படைப் பிரிவை உருவாக்கி தீவிரவாத சந்தேக நபர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகிறது. சிஐஏ யேமனையும் சோமாலியாவையும் சூழ பல இரகசிய ஆளில்லா விமானத் தளங்களை உருவாக்கியுள்ளது. அதன் நடவடிக்கைகளில் பல புதிய வகையான தாக்குதல் ஆளில்லா விமானங்கள் மேலும் இணைக்கப்படவுள்ளன. சிஐஏயின் அண்மைக்கால நடவடிக்கைகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.

அன்வர் அல் அவ்லாக்கியின் முக்கியத்துவம்.
நாற்பது வயதான அன்வர் அல் அவ்லாக்கி அமெரிக்க மாநிலமான நியூ மெக்சிக்கோவில் பிறந்து வட கரொலினாவில் வளர்ந்த மத போதகர். இவரின் பெற்றோர்கள் யேமன் நாட்டினர். Al-Qaeda in the Arabian Peninsula எனப்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்பின் தலைவர் இவரே. நவீன தொடர்பாடல் முறைமைகளைக் கையாள்வதில் வல்லவர் அற்புதமாக ஆங்கிலத்தில் தொடர்பாடல் செய்யக்கூடியவர். அதன் மூலம் அல் கெய்தாவிற்கு ஆட்சேர்ப்பதிலும் நிதி சேர்ப்பதிலும் முன்னின்று செயற்படுபவர். அல் கெய்தாவின் தீவிரவாதத்தை பத்திரிகை மூலம் வளர்ப்பவர். கடந்த சில வருடங்களாக பின் லாடனிலும் பார்க்க அன்வர் அல் அவ்லாக்கி அமெரிக்காவிற்கு அதிக ஆபத்து விளைவிப்பவராகச் செயற்பட்டார். தற்போது அல் கெய்தா இயக்கத்தின் செயற் கட்டளைத் தளபதியாகச் செய்ற்படுபவர் இவரே. 2009இல் அமெரிக்க விமானமொன்றை கணனி அச்சுப்பொறிக்குள் வெடிபொருள்களை வைத்து தகர்க்கும் திட்டத்தை தீட்டிய்வர் அன்வர் அல் அவ்லாக்கி. இது போன்ற பல அல் கெய்தாவின் அண்மைக்கால தாக்குதல் திட்டங்களைன் சூத்திரதாரி அன்வர் அல் அவ்லாக்கி. இவரைப் பற்றி ஒரு பிரித்தானிய உளவுத்துறை அதிகாரி தெரிவித்த கருத்து: “His influence is all the wider because he preaches and teaches in the English language which makes his message easier to access and understand for Western audiences.”

ஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்

அமெரிக்காவின் வெற்றி
 அன்வர் அல் அவ்லாக்கியின் கொலை மூலம் அமெரிக்கா சாதித்தவை:
  • ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றியீட்ட முடியும் என்பதை அமெரிக்கா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.
  • உலகத்தில் எந்த மூலையிலும் தனக்கு எதிரான தீவிரவாதிகளைத் தம்மால் கொல்ல முடியும், அவர்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது என்று நிரூபித்தது.
  • பின் லாடன் கொலையை திரை மறைவில் நிறைவேற்றிய அமெரிக்கா தம்மால் பகிரங்கமாகவும் தாக்குதல் நடாத்தி தீவிரவாதிகளைக் கொல்ல முடியும் என்று நிரூபித்துள்ளது.
  • அமெரிக்காவின் உளவுத் தகவல் திரட்டலின் திறமையை நிரூபித்துள்ளது.
  • அல் கெய்தாவிற்கு ஆள் திரட்டுவதில் வல்லவரான ஆங்கில மொழியிலும் அரபு மொழியிலும் நாவன்மையுடன் பேசக்கூடிய அன்வர் அல் அவ்லாக்கியை கொன்றதன் மூலம் அல் கெய்தாவிற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியமை.  அல் கெய்தாவில் ஆங்கிலம் பேசக் கூடிய போராளிகளுக்கான பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது.
அமெரிக்காவில் வாதப் பிரதிவாதங்கள்
ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் தேவையான நேரத்தில் தேவையான தாக்குதலைச் செய்யும் அதிகாரம் அமெரிக்கப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் யேமனில் ஓவ்வொரு தாக்குதலுக்கும் அமெரிக்க அதிபரின் அனுமதியை பெற்றே அமெரிக்கப் படையினரால் தாக்குதல் நடாத்த முடியும். ஒரு அமெரிக்கக் குடிமகனை அமெரிக்கா நீதி விசாரணை இன்றிக் கொல்லுதல் முறையான செயலா என்ற வாதம் அன்வர் அல் அவ்லாக்கியின் கொலையைத் தொடர்ந்து எழுந்துள்ளது. அன்வர் அல் அவ்லாக்கியை கொல்ல அமெரிக்க உளவுத் துறை கொல்லப் போகிறது என்பதை அறிந்த அவரது தந்தை அமெரிக்க நீதி மன்றில் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இருந்தார். இது அமெரிக்க நீதித் துறைக்கு அப்பாற்பட்டது என ஒரு விநோதமான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அமெரிக்கா போரில் ஈடுபட்டிராத நாடு ஒன்றில் அமெரிக்க ஒரு கொலையைப் புரிந்துள்ளது. 1976இல் அமெரிக்க அதிபராக இருந்த ஜெரார்ட் போர்ட் அமெரிக்காவின் அரசியல் கொலைகளைத் தடை செய்திருந்தார். இசுலாமியப் பயங்கரவாதம் உலகையே ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது என்கின்றனர் சில அமெரிக்கர்கள். கொலை இலக்கு அமெரிக்கர்களுக்கு உடனடியாக ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் கொலை நியாயப் படுத்தப்படக் கூடியது என்கிறார் ஒரு அமெரிக்க மனித உரிமைச் சட்டவியலாளர்.

ஒபாமாவைக் காப்பாற்றுமா
ஜோர்ச் புஷ் தோல்விகண்ட தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பராக் ஒபாமா வெற்றி கண்டுள்ளார் என்கிறார்கள் ஒபாமாவின் ஆதரவாளர்கள். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் பொருளாதார நெருக்கடியால் பல பின்னடைவுகளைச் சந்தித்து வரும் ஒபாமாவை அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றிகள் காப்பாற்றுமா?

    1 comment:

    vivek kayamozhi said...

    your post is very fresh,interesting.

    welldone, continue these type of matters instead of poems(kavithai)

    Featured post

    உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

    விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...