Saturday 2 November 2013

தலிபான் தலைவரை அமெரிக்க ஆளில்லா விமானம் கொன்றது

தலிபான் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ஹக்கிமுல்லா மெஹ்சுட் அமெரிக்காவின் சிஐஏயின் ஆளில்லாப் போர் விமாங்களில் இருந்து வீசப்பட்ட நான்கு ஏவுகணைகள் அவர் பயணித்துக் கொண்டிருந்த வண்டியைத் தாக்கியபோது உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதல் பாக்கிஸ்த்தானியப் பிரதேசமான வட வஜ்ரிஸ்த்தான் பகுதியில் நடந்திருந்தது. 33 வயதான இந்தப் போராளியின் தலைக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஹக்கிமுல்லா மெஹ்சுட் தலைமையில் தலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்த்தானின் கைபர் கடவையில் வைத்துப் பல தடவை நேட்டோப் படைகள் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர். 2007-ம் ஆண்டு முன்னூறு பாக்கிஸ்த்தானியப் படையினரைக் கைப்பற்றிப் பிரபலமானவர் ஹக்கிமுல்லா மெஹ்சுட். இவர் அடிக்கடி பிபிசியின் உருது சேவைக்குப் பேட்டியளிப்பவர்.

அமெரிக்காவின் தரப்பில் தமக்குக் கிடைத்த நம்பகமான உளவுத் தகவல் அடிப்படையில் ஹக்கிமுல்லா மெஹ்சுட் மசூதி ஒன்றில் தனது போராளிகளுடன் ஒரு கலந்துரையாடலை நடாத்தி விட்டு 01-11-2013 வெள்ளிக் கிழமை திரும்பிக் கொண்டிருக்கையில் தாம் ஆளில்லாப் போர் விமானத்தில் இருந்து வீசிய குண்டால் ஹக்கிமுல்லா மெஹ்சுட்டை கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் உளவுத்தகவல் திரட்டும் முறைமைக்கும் துல்லியமாக ஆளில்லா விமானம் மூலம் தாக்கும் திறைமைக்கும் கிடைத்த இன்னொரு வெற்றியாக ஹக்கிமுல்லா மெஹ்சுட்டை கொன்றது அமைகிறது.

தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சுட்டைக் கொன்றது தலிபானிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கருதப் படுகிறது. தலிபான் அமைப்பும் அல் கெய்தா அமைப்பும் தம்து அதிகாரங்களையும் செயற்பாட்டுகளையும் பெரிய அளவில் பரவலாக்கிவிட்டன. தலைமைக்கும் செயற்பாட்டாளர்களிற்கும் இடையிலான தொடர்பாடல்கள் ஒற்றுக் கேட்கப்படும் சாத்தியங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் மிக அதிகரித்துவிட்ட காரணத்தால் அந்த அமைப்புக்கள் இந்தப் பரவலாக்கத்தைச் செய்துள்ளன.

அமெரிக்காவின் முந்தைய தக்குதல்கள் பற்றிப் பார்க்க இங்கு சொடுக்கவும்

அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்குள் புகுந்து அடிக்கடி தாக்குதல்கள் நடாத்துகின்றன. இதில் போராளிகளும் அப்பாவிகளும் கொல்லப்படுகின்றனர். இதற்கு பாக்கிஸ்த்தானிய மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பாக்கிஸ்த்தானிய அரசு அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்ப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் அது அமெரிக்காவுடன் இணைந்து இரட்டை வேடம் போடுகின்றது.

Thursday 31 October 2013

தன் படை வலு காட்டும் சீனா

2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் திகதி காலை ஒரு வழிகாட்டி ஏவுகணை நாசகாரிக் கப்பல் உட்பட ஐந்து சீனக் கடற்படைக் கப்பல்கள் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடைப்பட்ட பன்னாட்டுக் கடலினூடாக முதல் தடவையாகப் பயணம் செய்தது. இது ஜப்பானுக்கு சீனா காட்டும் பூச்சாண்டியாகவே பார்க்கப்பட்டது.

படைத்துறையினரின் ஆளணி எண்ணிக்கையைப் பொறுத்தவரை சீனா உலகிலேயே பெரிய படையணியைக் கொண்ட நாடாகும். அதன் படையினரின் எண்ணிக்கை 22 இலட்சமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அது தனது பாதுகாப்புச் செலவைக் கூட்டிக் கொண்டே போகிறது.

பொதுவாக சீன ஆட்சியாளர்கள் தம் நாட்டைப்பற்றிய தகவல்களை இரகசியமாகவே வைத்திருப்பது வழக்கம். அதிலும் படைவலு பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாகவே சீனா காப்பாற்றி வருகிறது. ஒரு நாட்டின் தேசிய எல்லையையும் ஆதிக்க எல்லையையும் அதன் படைவலுவே தீர்மானிக்கிறது. சீனாவின் ஆதிக்க எல்லையை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளவும் மதிக்கவும் சீனாவின் படைவலுவைப் பற்றி மற்ற நாடுகள் சரியாக அறிந்து வைத்திருப்பது சீனாவிற்கு நன்மை தரக்கூடியது என்பதை சீனா உணர்ந்துள்ளது. ஜப்பானியக் கடல் எல்லைகளில் சீனக் கடற்படைக் கப்பல்களின் நடமாட்டம் ஜப்பானை அச்சுறுத்தக் கூடியது என ஓய்வு பெற்ற சீனக் கடற்படை அதிகாரி தெரிவித்திருந்தார். கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவும் ஜப்பானும் கடுமையாக முரண்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சீனா தனது கடற்படை வலுவை உலகிற்கும் தனது நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் உலக வல்லரசுகளில் எந்த ஒரு கடற்போரிலும் ஈடுபடாத சீனக் கடற்படை வலுவைக் காட்ட வேண்டிய நிர்ப்பநநதம் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது.

சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் எந்த ஒரு விபத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபடவில்லை என மார்தட்டிக் கொள்கின்றது. தனது பாதுக்பாப்பு முன்னேற்பாடுகள் அந்த அளவிற்கு உயர் தரம் வாய்ந்தது என்கிறது சீனா.



கடந்த சில தினங்களாக சீன அரசு ஊடகங்களில் சினாவின் கடற்படை பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் வெளிவந்தன. சீனாவின் மூன்று கடற்படைப் பிரிவுகளும் இணைந்து ஒரு பயிற்ச்சியில் ஈடுபட்டன. இதில் சினாவின் பழைய சியா வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. சினாவின் புதிய ஜின் வகை நீர்முழ்கிக் கப்பல்கள் இதில் காட்டப்படவில்லை. சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல் வலுவையே இந்தப் பயிற்ச்சி நடாத்தப் பட்டது. சீனா 1970-ம் ஆண்டிலிருந்து தனது நீர்மூழ்கிக் கப்பல்களை அபிவிருத்தி செய்து வருகின்றது. உலகிலேயே வலுமிக்க அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்களை சமாளிக்கக் கூடிய வகையில் சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களையும் ஏவுகணைகளையும் உருவாக்கி வருகின்றது. சீன ஊடகமான Global Times சீனப் படைவலுவை மற்ற நாடுகள் கணக்கில் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது:

"China is powerful in possessing a credible second-strike nuclear capability. Some countries haven't taken this into serious consideration when constituting their China policy, leading to a frivolous attitude toward China in public opinion."

சீனா தற்போது இரண்டு Type-94வகை Ballistic ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர் மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் ஒரேயடியாக 12 ஏவுகணைகளை வீசக் கூடியவை.  அவற்றின் பாய்ச்சல் தூரம் 7000 முதல் 13000கிலோ மீட்டர்கள் அதாவது 4300முதல் 8100 மைல்கள் சென்று தாக்கக் கூடியவை. சீனா இப்போது நான்கு புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகின்றது. இவை Type-96வகையைச் சார்ந்தவை. இவற்றால் 16 முதல் 24 வரையிலான Ballistic ஏவுகணைகளைத் தாங்கிச் செல்ல முடியும். சீனாவிடம் 200முதல் 240 வரையிலான அணுக்குண்டுகள் இருக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவிடம் மூன்று கடற்படைப் பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவிடம் நான்கு பிரிவுகளும் ஜப்பானிடம் ஒரு பிரிவும்  அமெரிக்கா, பிரிதானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் ஆறு பிரிவுகளை வைத்திருக்கின்றன. அமெரிக்கா தனது கடற்படைக்கு Ford வகை விமானம் தாங்கிக் கப்பல்களை இணைந்த பின்னர் சினாவின் கடற்படை அமெரிக்கக் கடற்படைக்கு கிட்டவும் நிற்க முடியாத நிலை ஏற்படும்.

பலவீனமான சீன விமானப்படை
அமெரிக்காவின் விமானப் படையுடன் ஒப்பிடுகையில் சீன விமானப்படை பலவீனமானதே. எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவிடம் சீனாவிடம் இருப்பதிலும் பார்க்க மூன்று மடங்கு போர் விமானங்கள் இருக்கின்றன. சீனாவின் விமானப்படையின் தரமும் படையினரின் போர் அனுபவமும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் தாழ்ந்து இருக்கின்றன. சீனா தனது விமான எந்திரங்களுக்கு இப்போதும் சோவியத் யூனியனின் தொழில் நுட்பத்திலேயே தங்கி இருக்கின்றது. அதன் உள்ளூர் விமான எந்திரத் தொழில் நுட்பம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

சீன விமானம் தாங்கிக் கப்பல்
அமெரிக்காவிடம் பத்து விமானம் தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றன. மிக நவீன மயப்படுத்தப் பட்ட மேலும் இரு போர்ட் வகை விமானம் தாங்கிக் கப்பல்களை விரைவில் அமெரிக்கா சேவையில் ஈடுபடுத்த இருக்கிறது. சீனாவிடம் தற்போது ஒரே ஒரு விமானம் தாங்கிக் கப்பல் இருக்கின்றது. சீனா விரைவில் மேலும் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா எப்படிச் சமாளிக்கும்?
சோவியத்துடனான பனிப் போரின் போது அமெரிக்கக் கடற்படை உலகெங்கும் கடலுக்கடியில் பல ஒலி உணரிகளைப் பொருத்தி வைத்திருந்தது. அவை இரசியக் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை துல்லியமாக உணரக் கூடியவை. இரசியாவின் நீர் மூழ்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் சீன நீர் மூழ்கிக் கப்பல்கள் இரைச்சல் மிகுந்தவை என்பதால் அவற்றைக் கண்டறிதல் இலகுவானதாகும். அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து சீனாவின் நீர் மூழ்கிக் கப்பலகளை கண்டறியக் கூடிய நிலைகளை சீனாவைச் சுற்று உருவாக்கியுள்ளன. அமெரிக்காவிற்கு அணுக் குண்டு தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலகளின் அசைவுகளைக் கண்டறியும் அறுபது ஆண்டு அனுபவம் உண்டு. சீன நீர் மூழ்கிக் கப்பல்கள் தமது நிலையில் இருந்து அசையத் தொடங்கியதில் இருந்து அவற்றின் நடமாட்டம் கண்டறியப்பட்டு அவை தண்ணீருக்கு அடியில் செல்லக் கூடிய ஏவுகணைகளை வீச முன்னர் அவற்றின் மீது தாக்குதல் தொடுக்கக் கூடியவகையில் அமெரிக்கா தனது தொழில் நுட்பத்தை வளர்த்துள்ளது.அத்துடன் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் அடுத்த தலைமுறை நீருக்கடி ஒலி உணரிகளை உருவாக்கி வருகின்றது. அவற்றால் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை மேலும் துல்லியமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

சீனா தனது வலுவைக் காட்டி தனது அயல் நாடுகளை மிரட்டினால் அவை யாவும் சீனாவிற்கு எதிரான ஒரு படைக் கூட்டமைப்பை உருவாக்குவதுடன் அதற்கு அமெரிக்காவை தலைமை தாங்க வைக்கலாம். இது அமெரிக்கா தனது படைத் தளங்களை சீனாவைச் சுற்றி அதிகரிக்கச் செய்வதுடன் அமெரிக்காவின் படைக்கல விற்பனையை அதிகரிக்கச் செய்யும்.  விளைவு சீனாவிற்கு சாதகமாக இருக்காது.

Wednesday 30 October 2013

பேச்சு வார்த்தைக்கு மறுத்த சிரியக் குழுக்கள். இரசியா கடும் ஆத்திரம்

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடும் பலமிக்க பத்தொன்பது குழுக்கள் ஜெனிவாவில் இரசியாவும் அமெரிக்காவும் இணைந்து ஏற்பாடு செய்த சமாதானப் பேச்சு வார்த்தையில் பங்கு பெற மறுத்து விட்டன. இதே வேளை அமெரிக்காவுடன் ஜெனிவாவில் பேச்சு வார்த்தை நடாத்தியமைக்காக சிரியத் துணைத் தலமை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சி செய்யும் குழுக்கள் ஜெனிவா சமாதானப் பேச்சு வார்த்தைக்கு செல்வதற்கு முன் நிபந்தனையாக சிரிய அதிபர் அல் அசாத் பதவி விலக வேண்டும் என வேண்டியுள்ளன. அசாத் பதவி விலகாமல் தாம் பேச்சு வார்த்தைக்குப் போவது சிரிய மக்களுக்குத் தாம் செய்யும் துரோகமாகும் என வலுமிக்க 19 சிரியப் போராளிக் குழுக்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் ரக்தர் பிராஹிமியைச் சந்தித்த சிரிய வெளிநாட்டமைச்சர் வலிட் முல்லெம் இலண்டனில் சிரியாவின் நண்பர்கள் குழு என்ற பெயரில் சில நாடுகள் கூடி நவம்பர் 23-ம் திகதி நடக்க ஒழுங்கு செய்த ஜெனிவா -2 பேச்சு வார்த்தையில் தமது அரசு பங்குபற்றும் என்றும் சிரியாவை யார் ஆள்வது என்பதை சிரிய மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ரக்தர் பிராஹிமி ஜெனிவாப் பேச்சு வார்த்தையில் அதிபர் அல் அசாத்தும் ஒரு முக்கிய பங்காளர் எனத் தெரிவித்தார்.

சிரியக் கிளர்ச்சிக் குழுக்களின் அறிக்கையால் ஆத்திர மடைந்த இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரோவ் 19 குழுக்களும் பேச்சு வார்த்தைக்கு வர மறுத்தமைக்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளே பொறுப்பு எனக் கூறி மேற்கு நாடுகளை மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.

சிரியாவில் இதுவரை 115,000முதல் 150,000வரையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இலட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். சிரியப் பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான செயற்பாடுகள் எதையும் மேற்கொள்ளாத சவுதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தனக்குக் கிடைத்த இரண்டு ஆண்டுகள் உறுப்புரிமையை வேண்டாம் என மறுத்துள்ளது. அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்காததாலும் சிரிய ஆட்சியாளர்கள் வேதியியல் குண்டுகள் வீசிய பின்னரும் லிபியாவில் செய்தது போல் சிரியாமீது தாக்குதல் செய்யாததும் சவுதி அரேபியாவை அமெரிக்காவிற்கு அமெரிக்காமீது கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவின் உளவுத் துறைத் தலைவர் பந்தர் பின் சுல்தான் சவுதி அரேபியா அமெரிக்கா தொடர்பான தனது கொள்கையில் பெரு மாற்றம் செய்யவிருப்பதாக அறிவித்தார். சவுதி அரேபியா தன்னிச்சையாகச் செயற்பட்டு சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு தானே படைக்கலன்களை வழங்கி தனக்கு ஆதரவான ஒரு சர்வாதிகார அரசை சிரியாவில் உருவாக்கலாம்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மாறும் கேந்திரோபாயம்

மத்திய கிழக்கில் ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய கேந்திரோபாய நோக்கங்களில் 1. எரிபொருள் விநியோகம் தங்குதடையின்றி நடத்தல், 2. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்தல், 3. ஒரு நாடு மற்ற நாட்டில் ஆதிக்கம் செலுத்தாமல் எல்லா நாடுகளும் அமெரிக்காவிற்கு அடங்கி இருக்க வேண்டும், 4. இசுலாமியத் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுதல் ஆகியவை முக்கியமானதாக இருந்தன. அமெரிக்காவின் இந்த நோக்கங்கள் இப்போது பல முனைகளில் பெரும் சவால்களைப்  எதிர்கொள்கின்றன.

அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளிற்கும் இடையிலான உறவு நெருக்கடிக்கு உள்ளாகின்றது என்பதால் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி 03-11-2013இல் இருந்து மத்திய கிழக்கிற்கு ஒரு பயணத்தை மேற் கொண்டுள்ளார். இது ஒரு முன்னறிவிக்கப்படாத ஒரு பயணமாகும். இது நவமபர் 12-ம் திகதிவரை தொடரும். அவரது முதல் கால் வைத்தது எகிப்தில்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள உள்ளக முரண்பாடுகளும் வெளி முரண்பாடுகளும் வெளி முரண்பாடுகளும் அமெரிக்காவுடனான அவற்றின் உறவில் தாக்கம் செலுத்துகின்றன.

துருக்கி
துருக்கி தேசமானது கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுநிலையாக துருக்கி இருக்கின்றது.  புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்பினராக இருக்கும் இசுலாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே நாடு துருக்கி. அது ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஒரு இணை உறுப்பு நாடாக இருக்கின்றது.

துருக்கி அமெரிக்க உறவில் அதிருப்தி
மேற்கு நாடுகளுடன் இணைந்து ஒரு இசுலாமிய நாடான துருக்கி மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினது உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்ச்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. துருக்கி ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான தனது உறவை சமநிலையில் வைத்திருக்கப் பெரும் பாடு படுகின்றது. ஈரானியர்கள் விசா நடைமுறையின்றிப் பயணிக்கக் கூடிய ஒரே ஒரு நாடு துருக்கியாகும். இதைப் பயன்படுத்தி ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் பிரதான தளமாக துருக்கியைப் பயன்படுத்துகிறது. சிஐஏயின் உளவாளி ஒருவர் துருக்கியின் இஸ்த்தான்புல் விமான நிலையத்தில் எட்டு ஈரானியப் போலிக் கடவுட்சீட்டுகளுடன் பிடிபட்டதன் பின்னர் அமெரிக்கா துருக்கியை ஈரானுக்கு எதிரான உளவு நடவடிக்கைத் தளமாகப் பயன்படுத்துவது அம்பலமாகியது. இது அமெரிக்க துருக்கி உறவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் சிரியாவின் பஷார் அல் அசாத்திற்கு எதிராக நேட்டோ கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கா துருக்கியை ஏமாற்றி விட்டது.

எகிப்து
எகிப்தில் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொஹமட் மேர்சியின் ஆட்சியை எகிப்தியப் படைத்துறையினர் கவிழ்த்ததில் இருந்து அமெரிக்க எகிப்து உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அமெரிக்கா எகிப்திற்கான தனது நிதி உதவியை நிறுத்தியது. இதனால் எகிப்தியப் படைத்துறை ஆட்சியாளர்கள் அதிருப்தி அடைந்தனர். படைத்துறையினரின் ஆட்சிக் கவிழ்ப்பை ஒரு படைத்துறைச் சதி என அமெரிக்கா கருத்துத் தெரிவிக்காததால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினரும் அதன் ஆதரவாளர்களும் ஆத்திரமடைந்திருந்தனர். 

விரக்தியடைந்த சவுதி அரேபியா

அரபுநாட்டில் ஐக்கிய அமெரிக்காவின் கேந்திரமுக்கியத்துவம் மிகுந்த நட்பு நாடாக சவுதி அரேபியா இருக்கின்றது. சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் அதிபரான இளவரசர் பந்தார் பின் சுல்தான் அமெரிக்காவுடனான சவுதி அரேபியாவின் உறவில் பெரிய மாற்றம் ஏற்படவிருக்கின்றது என சில ஐரோப்பிய இராசதந்திரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் 2013 ஒக்டோபர் 23-ம் திகதி தெரிவித்தது மத்திய கிழக்கின் இராசதந்திர மட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 22 ஆண்டுகள் வாஷிங்டனுக்கான சவுதியின் தூதுவராகப் பணியாற்றிய சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் அதிபரான இளவரசர் பந்தார் பின் சுல்தான் இப்படிக்கூறியது ஆச்சரியப்படவைக்கக் கூடியதே. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு போதிய படைக்கலன்கள் வழங்காததும் சிரியாவில் வேதியியல் படைக்கலனகள் பாவித்த பின்னரும் சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்காததும் விரக்தியை ஏற்படுத்தியது. எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்ததும் சவுதி அரேபியாவை ஆத்திரப்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய கிழக்கில் சவுதியின் பிரதான எதிரியான ஈரானுடன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாகவும் பொருளாதாரத் தடை நீக்கம் தொடர்பாகவும் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்த முன்னர் அமெரிக்கா தம்மைக் கலந்தாலோசிக்காதது  சவுதி அரேபியாவைக் கடும் விரக்திக்குள்ளாக்கியது. இந்த விரக்தி சவுதி அரேபியாவை சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக் பெரும் படைக்கல உதவிகளை வழங்கி சிரியாவில் தனக்கு ஆதரவான ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வைக்கலாம். அது இஸ்ரேலுக்குச் சாதகமாக அமைந்தால் அமெரிக்கா பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கலாம்.

பாவம் பாஹ்ரேய்ன்

ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு பாஹ்ரேய்னில் தளம் அமைத்து இருக்கிறது. உலக எரிபொருள் வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோமஸ் நீரிணையைப் பாதுகாக்க பாஹ்ரேய்னில் இருக்கும் தளம் முக்கியமானதாகும். பாஹ்ரெய்னில் அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தபடி இருக்கின்றனர். பாஹ்ரெய்னின் சுனி இசுலாமிய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் பதவியில் இருக்கின்றனர். பாஹ்ரெய்ன் ஆட்சியாளர்களுக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது அமெரிக்காவும் அவற்றுடன் இணைந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. பாஹ்ரெய்னின் கிளர்ச்சிக்காரர்களுள் பெரும்பானமையானவர்கள் சியா முசுலிம்களே. அவர்களுக்கு ஈரான் ஆதரவு வழங்கிவருகின்றது.

தீவிரமடையும் தீவிரவாதிகள்

மும்மர் கடாஃபிக்குப் பின்னர் லிபியாவின் புரட்சியாளர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்கு என்று நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டு அதற்குள் அடக்கு முறை ஆட்சியை செய்து வருகின்றன. ஈரான் லிபியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளை ஊக்குவித்து வருகின்றது. லிபியாவில் அல் கெய்தா வளர்ந்து வருகின்றது. சிரியப் போர் தொடரும் ஒவ்வொரு நாளும் அங்கு அல் கெய்தாப் போராளிகளும் ஹிஸ்புல்லாப் போராளிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தமக்குப் பலத்த உயிரழப்பை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா நம்பியிருந்தது. ஆனால் சிரியாவில் அவை இரண்டும் போர்க்கள அனுபவத்தைப் பெருக்கிக் கொள்வதுடன் தமக்கு என்று  நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டு நிலை கொண்டுவிடும் நிலை உருவாகியுள்ளது. சிரியாவில் அல் கெய்தா தனக்கு என ஒரு நிலப்பரப்பை கைப்பற்றிக் கொள்வது  மத்திய கிழக்கில் பெரும் பாதகமான நிலைமையை உருவாக்கும். சிரியப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவும் இரசியாவும் இணைந்து தொடர்பான சமரசத்திற்காக ஏற்பாடு செய்த ஜெனிவா-2 பேச்சு வார்த்தைக்கு அமெரிக்க சார்பு கிளர்ச்சி அமைப்புக்கள் பத்தொன்பது தாம் வரமாட்டோம் என மறுத்து விட்டன. இது இரசியாவைக் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இப்படிப்பட்ட பெரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமெரிக்க அரசு மத்திய கிழக்குத் தொடர்பான தனது கொள்கைகளையும் கேந்திரோபாய நோக்கங்களையும் மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்க அரசின் மனமாற்றம் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு கசிய விடப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் மத்திய கிழக்கு தொடர்பான கேந்திரோபாய நோக்கங்கள்:
1. ஈரானுடன் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டுதல், 2. பாலஸ்த்தினத்திற்கும் இஸ்ரெலுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்துதல்,
3. சிரியக் கிளர்ச்சியை தணித்தல்.

இதில் அமெரிக்கா ஜோர்ஜ் புஷ் காலத்தில் இருந்து சொல்லி வந்த இரு முக்கிய அம்சங்களைக் காணவில்லை. ஒன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றது மக்களாட்சியை ஏற்படுத்துதல்.

Tuesday 29 October 2013

பொதுநலவாய மாநாடும் வேற்று வடிவ ஊழலும்

வர்த்தகர்கள் தமக்கு தேவையானவை நடக்க ஆளும் கட்சியினருக்கு பணம் கொடுப்பார்கள் அது ஆளும் கட்சியினரின் குடும்பச் செல்வத்தை அதிகரிக்கும். இப்படித் திரண்ட செல்வத்தை வைத்து அவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை அதிகரித்துக் கொள்வார்கள். இது நம்ம ஊரில் நடப்பது ஆனால் பல மேற்கு நாடுகளில் நடப்பது வித்தியாசமானது.


மேற்கு நாடுகளில் கட்சிகள் வர்த்தக நிறுவனங்களுக்கு இலாபமீட்டக் கூடிய வகையில் செயற்பட்டால் கட்சிக்கு அந்த வர்த்தக நிறுவனங்கள் நன்கொடை வழங்கும். அல்லது இப்படிச் செய்யும் அரசியல்வாதியின் அடுத்த தேர்தல் பரப்புரையை அந்த வர்த்தக் நிறுவங்கள் பின்னால் நின்று பார்த்துக் கொள்ளும்.

இலங்கையில் நடக்கும் பொதுநலவாய நாடுகளில் பங்கேற்பது என்று உறுதியாக நிற்கும் நாடு ஒஸ்ரேலியா. இலங்கையில் நடந்த எல்லா மனித உரிமை மீறலகளையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் பிரித்தானிய அரசு பிரித்தானியா. அதன் தலைமை அமைச்சரும் இளவரசர் சார்ல்ஸும் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் பங்கு பற்றவிருக்கின்றனர்.
இவற்றின் பின்னணியில் இருப்பது என்ன?

ஒஸ்ரேலியாவின் James Packerஇல் சூதாட்டக் கிளையானCrown Ltd நிறுவனம் இலங்கையுடன் இணைந்து தனது சூதாட்ட நிலையத்தை இலங்கையில் உருவாக்கவிருக்கிறது. நானூறு மில்லியன் டொலர்கள் பெறுமதியான Crown Sri Lankaஎன்னும் பெயர் கொண்ட இந்த சூதாட்ட நிலையம் 450 அறைகளைக் கொண்டது. இதில் உணவகங்களும் களியாட்ட நிலையங்களும் உள்ளடக்கம். சீனர்களிடையே சூதாட்ட ஆசை பெருகி வருகின்றது. சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளை பிரதான இலக்காகக் கொண்டே இந்த சூதாட்ட நிலையம் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த செய்தி வெளிவந்தவுடன் Crown Ltdஇன் பங்கு விலைகள் பெருமளவு அதிகரித்தது.

இலங்கை பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் போக்கு வரத்துக்கு பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான Rolls Royce ஆடம்பர மகிழூர்ந்திகளை இலங்கை இறக்குமதி செய்ய இருக்கிறது.

இந்தியாவுடன் சீபா ஒப்பந்தத்தை செய்ய இலங்கை மறுத்து வருகிறது.

Monday 28 October 2013

சீனாவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தயார் என்கிறது ஜப்பான்


ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே சீனாவின் கிழக்குச் சீனக் கடற்கரையில் சீனாவின் வாலாட்டலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை ஜப்பான் எடுக்குன் எனக் கூறியுள்ளார். The Wall Street Journalஇற்கு வழங்கிய பேட்டியிலேயே ஜப்பானியப் பிரதமர் இப்படி முழங்கியுள்ளார்.

கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களில் 1968இல் எண்ணெய் வளம் இருக்கலாம் எனக் கண்டறிந்ததைத் தொடர்ந்து சீனா அவற்றிற்கு உரிமை கொண்டாடி வருகிறது. கிழக்குச் சீனக் கடலில் மொத்தம் ஐந்து தீவுக் கூட்டங்களிற்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. 2012 டிசம்பர் ஆரம்பப்பகுதியில் இத் தீவுகளின் வான எல்லைக்குள் வந்த சீன விமானப்படை விமானங்களை ஜப்பானிய விமானங்கள் அலைவரிசைகளைக் குழப்பி திருப்பி அனுப்பின. அது மட்டுமல்ல தென் சீனக் கடலிலும் உள்ள எல்லாத் தீவுகளையும் சீனா தன்னுடையது என்கிறது. இதனால் சீனாவிற்கும் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், தாய்வான், இந்தோனிசியா ஆகிய நாடுகளிற்கும் இடையில் கடும் முறுகல் நிலைகள் ஏற்பட்டுள்ளது. கிழக்குச் சீன கடலில் இருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை விரட்டிய பின்னர் சன் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி அமெரிக்கா கிழக்குச் சீனக் கடல் தீவுகளைத் தனதாக்கிக் கொண்டது. பின்னர் 1972இல் இத் தீவுகளை அமெரிக்கா ஜப்பானிடம் கையளித்தது. கிழக்குச் சீனக் கடற்படுக்கையில் அறுபது முதல் நூறு பில்லியன் பீப்பாய் எரிபொருள் வளம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. 1894-95இல் நடந்த போரில் சீனா ஜப்பானிடம் படு தோல்வியடைந்தது. இதன் போது சீனாவிடமிருந்து கொரியாவையும் தாய்வானையும் ஜப்பான் பிடுங்கிக் கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பான் தாய்வானை சீனாவிடம் திருப்பிக் கொடுத்தது. சீனப் புரட்சியின் பின்னர் தாய்வான் தனி நாடாக இருக்கிறது. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு தனித்தனி நாடுகளானது.  

சீனா சட்டப்படி தனது எல்லைகளைத் தீர்மானிப்பதிலும் பார்க்க படைபலத்தின் மூலம் தீர்மானிக்க முயல்கிறது எனச் சொல்லிய ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே அந்தச் சவாலை உறுதியுடன் எதிர்கொள்ள ஜப்பான் எல்லாவிதத்திலும் தயார் எனச் சொல்லியுள்ளார். ஆசியப் பிராந்திய நாடுகள் ஜப்பான் தலைமையில் சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை எதிர் கொள்ளும் தமது விருப்பத்தை ஜப்பானிடம் தெரிவித்துள்ளன என்றார் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே. அத்துடன் அபே தனது பிராந்தியத்திற்குள் வரும் ஆளில்லா விமானங்களை ஜப்பான் சுட்டு வீழ்த்தும் என்றார். கடந்த சில தினங்களாக ஜப்பான் தனது என உரிமை கொண்டாடும் ஒகினாவா தீவுப்பகுதியில் சீன வேவு பார்க்கும் விமானங்களின் நடமாட்டைத்தை அவதானித்த ஜப்பானியப் படையினர் அந்த விமாங்களின் அலைவரிசைகளைக் குழப்பி அவற்றைப் பின்வாங்கச் செய்தனர்.இரு நாட்டுக் ரோந்துக் கப்பல்களும் பிரச்சனைக்குரிய தீவுகளில் ஒன்றை ஒன்று நிழல் போல் தொடர்கின்றன. இதனால் பட தடவை போர் மூளும் ஆபாயங்களும் உருவாகின.

ஜப்பானியத் தலைமை அமைச்சர் அபேயின் கூற்றுக்குப் பதிலளித்த சீனாவின் முன்னாள் இராசதந்திரி ஜப்பான் சீனாவின் பலத்தை குறைத்து எடை போடக் கூடாது என்றார். சீனா தன்னைப் பாதுகாக்க தேவையானவை எவற்றையும் செய்யும் என்றார் அவர்.சீனாவின் வெளி நாட்டமைச்சர் ஹுவா சன் ஜிங் ஜப்பானியத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஆத்திரமூட்டக் கூடியவகையில் பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் குற்ற உணர்வுகளால் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றும் சொன்னார் சீன வெளிநாட்டமைச்சர். 1931இற்கும் 1945இற்கும் இடையில் சீனாவை ஆக்கிரமித்த ஜப்பான் சீனர்களுக்கு செய்த அட்டூழியங்கள் பாலியல் அடிமைத்தனங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டே குற்ற உணர்வு என்ற பததத்தை சீன வெளிநாட்டமைச்சர் பாவித்திருக்க வேண்டும்.

தற்போது உலகத்திலேயே பெரும் போர் ஒன்று மூழக்கூடிய ஒரு பிரதேசமாக கிழக்குச் சீனக் கடல் இருக்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...