Saturday 14 December 2013

தேசக்குரல் இன்றிருந்தால்

மாவீரர் நாளில் கண்ணீர் சிந்தி
சிந்தை கலங்கி நாம் நிற்கையிலே
தன் குத்து வசனங்களால்
எம்மைச் சிரிக்க வைத்து
சிந்திக்க்கவும் வைத்து
கொள்கை விளக்கம்
கொடுப்பார் எங்கள் தேசத்தின் குரல்

இன்றிருந்தால்

இரகசியமாய் மரக் கன்று நடவும்
மாட்டுக்கு நலமடிக்கவும்தான்
மாகாணசபைக்கு அதிகாரம்  உண்டென்று
கொள்கை விளக்கம்
கொடுப்பார் எங்கள் தேசக் குரல்
இன்றிருந்தால்

குங்குமப் பொட்டுக்காரனை
குண்டம்மாவும் வரவேண்டாம்
என ஒதுக்கினாள்
எனக் கிண்டலடிப்பார்
எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்

மக்களைக் கண்டதும் சம்பந்தரின்
கார் பின்னோக்கிப் போகின்றது
சம்பந்தரின் கார் மட்டுமல்ல
TNAயும்தான் ரிவேர்ஸில் போகின்றது
இப்படியே சம்பந்தர் போனால்
சொப்பன சுந்தரியின் கார் போல்
ஆவார் சம்பந்தர்
TNAஐ வைச்சிருந்த சம்பந்தரை
இப்ப ஆர் வைச்சிருக்கின என்ற
கேள்வி நாளைக்கு வ்ரும்
எனக் கிண்டலடிப்பார்
எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்

குங்குமப் பொட்டுக்காரன்
சாப்பிட்ட கை கழுவப் போறதுக்கும்
சிங்களப் படை ஆளுனரின்
அனுமதிப் பெற்றுத்தான் கழுவ வேண்டும்
என நகைச்சுவையாகப் பேசுவார்

எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்

இத்தாலி அக்காவிற்கு ஏதோ வருத்தமாம்
அடிக்கடி அமெரிக்கா போறா
என்ன வருத்தம் என்று சொல்றா இல்லை
அது என்ன சொல்லக் கூடாத வருத்தமா-இல்லை

சொல்லக் கூடாத இடத்தில் வருத்தமா
எனக் கேட்டுக் கிண்டலடிப்பார்
எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்

ஜெர்மனி பிறேமன் நகரில்
மக்களின் நிரந்தர தீர்ப்பாயம்
திரைப்படமல்ல திரைப்பட விளம்பரமே
உண்மையான திரைப்படம் இனித்தான் வரும்
என்று இனிதாக விளக்கம் கொடுப்பார்

எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்


நெறிகாட்டி வழிகாட்டி
குறிகாட்டி குணம் காட்டி
அறிவூட்டி தலைவன் செயலிற்கு
பொருள் கூட்டிப் பரப்புரை செய்ததனால்
தேசக் குரலானார் எங்கள் பாலா அண்ணா

அருமருந்தான கருத்துக்களை
நகைச்சுவைத் தேனூட்டி
எம் சிந்தனை நாவில் தடவும்
அறிவுப் பாட்டியாக் கிடைத்தவர்
எங்கள் தேசக் குரல் பாலா அண்ணா

Wednesday 11 December 2013

பாரதி என்று ஒரு கோழைக் கவிஞன்

இரசியப் புரட்சியை காளியின்
கடைக்கண் பார்வை எனவும்
யுகப் புரட்சி எனவும் போற்றிப் பாடியதால்
புரட்சிக் கவிஞன் ஆனவன்

ஒவ்வொரு கவிக்கும்
இசையோடு தாளமும் கொடுத்து
ஓசையோடு நயம் கொடுத்து
எழுதி வைத்ததால்
இசைக் கவிஞன் ஆனவன்

பெண்ணடிமையை எதிர்த்ததால்
பாஞ்சாலி சபதத்தில்
மனுதர்ம சாஸ்த்திரத்தை
திரிபு படுத்திய சாஸ்த்திரம் என்றதால்
புதுமைக் கவிஞன் ஆனவன்

கோகுலத்துக் கண்ணனைத்
தன் காம வேட்கை தீர்க்கும்
காதலனாக்கிப் பாடியதால்
தன்னினச் சேர்க்கைக் கவிஞன் ஆனவன்
இன்னும் குழந்தையாக்கிப் பார்த்ததனால்

paedophile கவிஞன் ஆனவன்



தமிழர் ஆண்ட மண்ணை

மறவர் வீரம் படைத்த நிலத்தை
சிங்களத் தீவென்றழைத்து
அறியாமையை வெளிப்படுத்தியதால்
அறிவிலியான கவிஞன் ஆனவன்.

அச்சம் தவிர் என்று அடித்துக் கூறியவன்
அச்சமில்லல அச்சமில்லை எனப்பாடியவன்
பாரதம் என்ற பெயர் சொன்னால்
பயம் போகுமென்றவன்
காவற்துறைக்கு அஞ்சி
பாண்டிச் சேரிக்கு ஓடிப் போனதால்
கோழைக் கவிஞன் ஆனவன்

தமிழ்போல் வேறு மொழியில்லை
எனப்பாடிப் புகழ்ந்ததால்
செந்தமிழ் நாடென்றால் தேன் என்றதால்
பிராந்தியக் கவிஞன் ஆனவன்

ஆதிமறை தோன்றிய ஆரிய நாடே"
"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"

என இந்தியாவை ஆரியர் தேசமெனப்பாடியதால்
சாதியக் கவிஞன் ஆனவன்

குரங்கின் அழகையும்
மாட்டின் அழகையும்
குயிலாகிப் போற்றிப் போற்றி
காதல் போயின் சாதல் எனப்பாடியதால்
கனவுலகக் கவிஞன் ஆனவன்

வெள்ளையனை வெளியேறு எனப்பாடினான்
விடுதலை வேண்டிப்பாடினான்
இன்று வெள்ளைச்சி தனி ஒருத்தியாக
பாரத்தத்தை கொள்ளையடிக்கிறாள்
ஆட்டிப் படைக்கிறாள் - அதனால்
எதிர்காலம் உணாராத கவிஞன் ஆனான்

பார்ப்பானை ஐயனென்ற காலமும் போகவில்லை
வெள்ளைக்காரப் பரங்கியை சைபர் கூலிகள்
துரையென்று பெங்களூரில் இன்றும் கைககட்டி
வாய் பொத்திச் சேவகம் புரிவதும் நிற்கவில்லை - அதனால்
நினைத்ததை நடக்கச் செய்யாத கவிஞன் ஆனான்

வெள்ளிப் பனிமலையில் இந்தியப்படைகள்
சீனனிடம் அடிவாங்குவதாலும்
வங்கக் கடலில் சிங்களவனால்
சுடுபட்டு இந்தியன் மாள்வதாலும்
தீர்கதரிசனம் இல்லாக் கவிஞன் ஆனவன்

பார்க்கும் கண்களுக்கெல்லா
பலதோற்றக் கொடுக்கும் கவிவடித்தவன்
தேசியம் என்னும்
ஒரு சொல்லிலும் அடங்காது
ஒரு வரியிலும் அடங்காது
ஒரு காவியத்திலும் அடங்காது
பன்முகக் கவிஞன்
பாரதியின் கவித்திறன்

Tuesday 10 December 2013

சீனாவிற்கு எதிராகக் களமிறங்கியது தென் கொரியா

நவம்பர் 23-ம் திகதி சர்ச்சைக்குரிய கிழக்குச் சீனக் கடலில் சீனா அறிவித்த பத்து இலட்சம் சதுர மைல்கள் கொண்ட வான் பாதுகாப்பு இனம்காட்டும் வலயத்திற்குப் பதிலடியாக தென் கொரியாவும் அதே மாதிரியான தனது வலயத்தை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது.


கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பானிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது. ஜப்பானின் நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள பிரதேசத்தை அன்னியர் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய ஒப்பந்த ரீதியான கடப்பாடு அமெரிக்காவிற்கு உண்டு.

சீனா அறிவித்த வலயத்தில் ஜப்பானும் தென் கொரியாவுன் தமது என அறிவித்த பிரதேசங்களும் அடங்குகின்றன. சீனா வான் பாதுகாப்பு இனம்காட்டும் வலயத்திற்குள் பறக்கும் விமானங்கள் சீன அரசிற்கு தம்மை இனங்காட்ட வேண்டும் என சீனா எதிர்பார்த்தது. சீனாவின் அறிவிப்பிற்கு சவால் விடும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து தமது போர்விமானங்களையும் வர்த்தக விமானங்களையும் மாறி மாறிப் பறக்க விட்டன. இதனால் ஏற்பட்ட பதட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்கத் துணை அதிபர் ஜொ பிடன் ஜப்பானிற்கும் சீனாவிற்கும் பயணங்களை மேற் கொண்டார். இவரின் நோக்கம் அங்கு பதட்டத்தை தவிர்ப்பது மட்டுமல்ல சீனாவை மிரட்டுவதையும் கொண்டதாகக் கருதலாம். இவரின் பயணத்துடன் அமெரிக்காவின் பி-52 எனப்படும் நீர்முழ்கிகளை அழிக்கக் கூடிய போர் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியது. இரண்டாம் உலகப் போரின் பின்அமெரிக்காவும் ஜப்பானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியும் அதைத் தொடர்ந்த்து இரண்டு நாடுகளும் செய்த ஒப்பந்தங்களின் படியும் ஜப்பானின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிற்கு உண்டு. இதன்படி அமெரிக்கா ஜப்பானில் தனது படைகளையும் நிறுத்தியுள்ளது.

அமெரிக்கத் துணை அதிபரின் பயணத்தைத் தொடர்ந்துதென் கொரியா தானும் ஒரு வான் பாதுகாப்பு இனம்காணும் பிராந்தியத்தைப் பிரகடனம் செய்தது அமெரிக்கத் துணை அதிபரின் பயணம் சீனாவை அடக்கும் நோக்கம் கொண்டதா எனச் சந்தேகிக்க வைக்கின்றது.

தென் கொரியாவின் அறிவிப்பு வருந்தத் தக்கது என சீனா அறிவித்துள்ளது. சீனாவின் பதிலில் கண்டனம் தெரிவிக்காமல் வருத்தம் தெரிவித்தது அதன் மென்மையான அணுகு முறையாகக் கொள்ளலாம் என சில பன்னாட்டு அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

Monday 9 December 2013

சீனாவிற்கு ஆபத்தாகும் அமெரிக்க ஈரானிய உறவு

மத்திய கிழக்குத் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் கொள்கையில்  உலக எரிபொருள் விநியோகம், இஸ்ரேலின் பாதுகாப்பு, பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கர வாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை, பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களின் பரம்பலைத் தடுத்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

அண்மைக் காலங்களாக அமெரிக்காவின் நட்புநாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியா, எகிப்து ஆகியவை அமெரிக்காவின் மத்திய கிழக்கு தொடர்பான கொள்கை தமக்குப் பாதகமாக மாறுவதாக உணர்கின்றன. இந்த நாடுகளின் ஊடகங்கள் இதை அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றன.சவுதியும் எகிப்தும் இரசியாவுடன் தமது நட்பை வளர்க்க முயல்கின்றன. 

சிரியப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை அங்கு இருக்கும் வேதியியல் படைக்கலன்களை அழிப்பது மட்டுமே. அங்கு நடக்கும் மோதல்கள் பற்றியோ அங்கு ஒரு இலட்சத்தையும் தாண்டிப் போயுள்ள உயிரழப்புக்களைப்பற்றியோ அமெரிக்கா கவலைப்படவில்லை. 

ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் தற்போது ஒன்றிற்கு ஒன்று அதிகம் தேவைப்படுகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை ஈரானைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்தப் பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்டால் ஈரானிய மக்கள் பெரிய சுமையில் இருந்து விடுபடுவார்கள். ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்காக சில விட்டுக் கொட்டுப்புக்களைச் செய்து ஈரான் அமெரிக்காவுடன் உறவை வளர்க்க ஈரான் விரும்புகிறது. 

ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டால் உலகில் எரிபொருள் விலை குறைந்து உலகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதாலும் ஈரானிற்கு அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவு ஏற்றுமதியைச் செய்ய முடியுமமென்பதாலும் அமெரிக்காவிற்கு ஈரானைத் தேவைப்படுகின்றது. மேலும் அமெரிக்காவும் ஈரானும் உறவில் நெருங்கி வந்தால் அது பல இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களைப் பலவீனப் படுத்துவதுடன் இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். 

அமெரிக்காவும் ஈரானும்  தம் நிலைப்பாட்டில் செய்துள்ள மாற்றங்கள் நாளடைவில் மேம்பட்டு ஒரு கேர்ந்திரோபாய பங்காண்மையாக மாறும் சாத்தியம் உண்டு. இதற்கு பாலஸ்தீனப் பிரச்சனை தடையாக இப்போது இருகின்றது. இத் தடையை  நீக்க பாலஸ்த்தீனத்தில் இரு அரசுத் தீர்வை அமெரிக்கா கொண்டுவரவேண்டும்.

1970களில் அமெரிக்காவும் ஈரானும் சவுதி அரேபியாவும் கேந்திரோபாயப் பங்காளிகளாக இருந்து கொண்டு சோவியத் ஒன்றியத்திற்கும் அதன் நட்பு நாடுகளாக இருந்த சிரியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளிற்கும் எதிராக ஒரு கேர்திரோபாய சமநிலையைப் பேணிக்கொண்டிருதன. ஈரான் மன்னாராக இருந்த ஷா மோசமான சுரண்டல் ஆட்சியைச் செய்து கொண்டிருந்த படியால் அங்கு மதவாதிகள் புரட்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றி ஈரானை அமெரிக்காவின் மோசமான எதிரி நாடாக மாற்றினர். பின்னர் காம்ப் டேவிட் உடன்படிக்கையின் பின்னர் எகிப்து அமெரிக்காவின் கேர்ந்திரோபாய நட்பு நாடாக மாற்றப்பட்டது. இப்போது ஜெனிவாவில் நடக்கும் ஈரானான பேச்சு வார்த்தையின் பின்னர் அமெரிக்காவின் பங்காளியாக ஈரான் மாறினால் அமெரிக்காவால் இலகுவாக ஹோமஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த முடியும். இதனால்  சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் மற்ற மூலப் பொருள் விநியோகத்தையும் ஆபிரிக்காவிற்க்கான சீன ஏற்றுமதியையு்ம் நினைத்த நேரத்தில்  இலகுவாகத் துண்டிக்க முடியும். தற்போது அமெரிக்கா பாஹ்ரெய்னில் இருக்கும் தனது கடற்படைத் தளத்தின் மூலம் ஹோமஸ் நீரிணையைப் பாதுகாத்துவருகின்றது. சீனா பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தை தனது நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கின்றது. அதில் இருந்து கொண்டு ஹோமஸ் நீரிணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரானுடன் சீனா இணைய வேண்டும். ஆனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை சீனா இரத்துச் (வீட்டோ) செய்யாதது கடும் அதிருப்தியை அளித்தது. இதனால் சீன ஈரானிய உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்க ஈரானிய கேந்திரோபாய இணைவு சீனாவிற்கு ஆபத்தாக முடியும்.

Sunday 8 December 2013

அணுக்குண்டுகளை எடுத்துச் செல்லக் கூடிய அமெரிக்காவின் புதிய ஆளில்லாப் போர் விமானம்

பின் லாடனைக் கொலை செய்த போது பாவிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானம் இப்போது மேலும் மேம்படுத்தப்பட்டு ஒரு புதிய ரக விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. Unmanned Aerial System (UAS) என்றும் Drone என்றும் அழைக்கப்படும் ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் அமெரிக்கா இன்னும் ஒரு படியைத் தாண்டியுள்ளது. புதிய ஆளில்லாப் போர்விமானத்திற்கு RQ-180 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உளவு பார்த்தல், கண்காணித்தல், வேவுபார்த்தல் {intelligence, surveillance and reconnaissance (ISR)} ஆகியவற்றி ஈடுபடுத்தக் கூடிய புதிய RQ-180ஆளில்லாப் போர்விமானங்கள் படைத்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளின் வான் பரப்பில் கூட அவர்களின் விமான எதிர்ப்பு முறைமை, கதுவி(ரடார்) முறைமை ஆகியவறிற்கு புலப்படாத வகையில் பறக்கக் கூடியவை. இவற்றில் active, electronically scanned array (AESA) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் வேவு பார்க்கச் சென்று ஈரானியர்களின் கைகளில் சிக்கிக் கொண்ட RQ-170ஆளில்லாப் போர்விமானத்திலும் பார்க்க பல மடங்கு திறனுடையது புதிய RQ-180. அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயின் பணிக்காக ஈரானுக்கு வேவு பார்க்கச் சென்ற  ஆளில்லாப் போர்விமானம் ஒன்று காணாமற் போனதாக 2011 டிசம்பர் மாத ஆரம்பத்தில் அறிவித்தது. டிசெம்பர் 4-ம் திகதி ஈரான் அமெரிக்க ஆளில்லாப் போர்விமானமொன்றை தனது இணையவெளிப் போராளிகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. இந்த முரண்பட்ட செய்தியில் அடிபட்டது அமெரிக்காவிடமுள்ள  வேவுபார்க்கும் ஆளில்லா விமானமான RQ-170 வகையைச் சேர்ந்தது. இது அமெரிக்காவிடம் உள்ள மிக உயர்தர உணர்திறனுடைய கருவிகளைக் கொண்டது. இந்த சம்பவம் இரு அம்சங்களை உணர்த்தியது: 1. எதிர்காலப் போர் முனைகளில் ஆளில்லாப் போர்விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது. 2. எதிர்காலப் போர் இணையவெளியிலும் நடக்க விருக்கிறது.

இரு வகையான ஆளில்லாப் போர் விமானங்கள்
முதலில் வேவு பார்க்க மட்டும் பாவிக்கப்பட்டு வந்த ஆளில்லப் போர் விமானங்கள் இப்போது ஏவுகணைகள் வீசித் தாக்குவதற்கும் பயன் படுகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மிகச் சிறந்த ஆயுதமாக ஆளில்லாப் போர்விமானங்கள் கருதப்படுகின்றன. பல நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக புதிய ஆராச்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பெருமளவில் ஆளில்லா விமானங்களைப் பாவித்து வருகிறது. சீர்வேக ஏவுகணைகள் (Cruise missiles) ஓரளவு நிலையான இலக்குக்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கே பெரிதும் பயன்படும். அசைந்து கொண்டிருக்கும் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஆளில்லா விமானங்களில் இருந்து வீசப்படும்  ஏவுகணைகள் பெரிதும் பயன்படுகின்றன.

RQ-180 ஆளில்லாப் போர்விமானம் புலப்படாமை (stealth)  காற்றியக்த் திறன் (aerodynamic efficiency) ஆகியவற்றில் மிகச்சிறந்து விளங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. மற்ற ஆளில்லாப் போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் இவை அதிக உயரம் அதிக தூரம் அதிக நேரம் பற்ப்பில் ஈடுபடக் கூடியவையாகும். 15 தொன் எடையுள்ள்ள தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடியவை. இதற்கு முந்திய ஆளில்லா விமானங்கள் ஆகக் கூடியது ஆறு மணித்தியாலங்கள் மட்டுமே பறக்கக் கூடியவை. 1200 வான் மைல்கள் தூரம் பறக்கக் கூடியவை. RQ-180 தாக்குதல் திறன் பற்றிய தகவல்கள் வெளிவிடப்படவில்லை. சில தகவல்கள் இவை அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று வீசக்கூடியவை எனத் தெரிவிக்கின்றன. இவை electronic attack missions இலும் ஈடுபடக் கூடியவை எனப்படுகின்றது. எதிரி நாட்டில் இலத்திரனியல் கருவிகளை இவை செயலிழக்கச் செய்யக் கூடியவை. இதனால் எதிரி நாட்டின் கதுவிகள், வான் எதிர்ப்பு முறைமைகள் செயலிழக்கச் செய்யப்படும்.

அமெரிக்காவின் இரகசிய விமானப்படைத் தளமான Area - 51இல் RQ-180 ஆளில்லா விமானம் இப்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இவை 2015-ம் ஆண்டில் இருந்து பாவனைக்கு வரும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...