Monday 12 May 2014

மோடியின் பிரச்சாரக் குழு பொய்களை அவிழ்த்து விட்டதா?

பாரதிய ஜனதாக் கட்சியின் மக்களவைத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுஸ்மா சுவராஜ், மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர்  அருண் ஜெட்லி, நரேந்திர மோடியின் வலது கரமான அமித் ஷா. பாஜகவின் தலைமைப் பேச்சாளர் சுதன்ஷு திரிவேதி ஆகியோர் தலைமையில் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பயின்ற விற்பன்னர்கள் நாற்பது பேர் கொண்ட ஒரு குழு மோடியின் தேர்தல் பரப்புரையைச் செய்தது. இந்தக் குழுவின் கீழ் இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் 19 குழுக்களாக சமூக வலைத்தளங்கள் உட்படப் பல முனைகளில் தமது பரப்புரைகளைச் செய்தனர்.

இந்தியத் தேர்தலில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களும் இலத்திரனிய ஊடகங்களும் நவீன தொழில் நுட்பங்களும் 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மோடியின் பரப்புரைப் பொறி இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றது.மோடியே ஒரு நவீன மயமானவர். இந்தியாவில் முதல் இலத்திரனியல் நாட்குறிப்பைப் பாவித்த அரசியல்வாதி மோடி எனப்படுகின்றது.  பராக ஒபாமாவின் தேர்தல் உத்திகளை மோடியின் பரப்புரைக் குழுவினர் பின்பற்றுகின்றனர்.

பியுஷ் கோயல், அஜய் சிங் ஆகிய இரு நிபுணர்கள் கட்சியின் creative and media strategy இற்குப் பொறுப்பாக இருக்கின்றனர். மோடியின் பரப்புரைக் குழுவினர் ஒராண்டுக்கு முன்னரே நன்கு திட்டமிட்டு பல நிலைகளாக தமது பரப்புரையை வகுத்து மோடியைச் "சந்தைப்படுத்தினர்". இவர்களுக்கான தேர்வுக் களமாக ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்கள் அமைந்தன. அவற்றில் பெற்ற வெற்றிகளையும் தோல்விகளையும் நன்கு மீளாய்வு செய்து தமது பரப்புரையை மேலும் சீர் செய்தனர்.

கவித்துவ மோடி
Minimum government. Maximum governance போன்ற கவர்ச்சிகரமான வாசகங்கள் உருவாக்கப்பட்டன. மோடியின் கவித்துவமும் நாவன்மையும் மேலதிக பரப்புரைக் கருவிகளாகின. கிராமங்களுக்கு பட்டி தொட்டிய் எல்லாம் சென்று பரப்புரை செய்ய ஜீ.பி.எஸ் வழிகாட்டிகள் பொருத்தப்பட்ட வண்டிகள் பல பயன்படுத்தப்பட்டன. ராகுல் காந்தி உட்பட காங்கிரசுப் பிரமுகர்கள் கூட்டங்களில் ஆற்றும் உரையின் முக்கிய பகுதிகள் மோடி வானில் பறந்து கொண்டிருக்கும் போது கூட அனுப்பப்பட்டன.

Virtual Modi
மோடி ஒரு இடத்தில் ஆற்றும் உரை மாநிலத்தின் வேறு இடங்களில் இருக்கும் மக்கள் 3Dயில் பார்க்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரசுக் கட்சியினர் வறிய மக்கள் வாழும் இந்தியாவில் மோடி பல கோடிகளைச் செலவழித்து தேர்தல் பரப்புரை செய்கின்றார் என்றால் அதற்குப் பதிலடியாக பாஜகவினர் காங்கிரசின் ஆட்சியால் இந்தியாவின் மக்கள் வறுமையால் இருக்கின்றார்கள் எனப் பதிலடி கொடுப்பார்கள்.

பேஸ்புக்கில் நரேந்திர மோடியின் பக்கத்தை 14 மில்லியன் பேர் விரும்பியுள்ளனர். இது நரேந்திர மோடியின்  தகவல் தொழிநுட்ப நிபுணர்களால் போலியாக உருவாக்கப்பட்டது என கோப்ரா போஸ்ட் என்னும் புலனாய்வு ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.

நமோ என்பது வடமொழியில் ஒரு புனித சொல். மந்திரங்களில் அதிகம் இடம்பெறும் சொல். நரேந்திர மோடியின் பெயரை நமோ எனச் சுருக்கி அதை ஒரு விற்பன உருவாக (brand) மோடியின் பரப்புரைக் குழுவினர் மாற்றிவிட்டனர்.

மோடி தேர்தல் மேடைகளில் உரையாற்றும் போது, ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போது பின்னணியில் என்ன தெரிய வேண்டும் என்பது நன்கு திட்டமிடப்பட்டு இருந்தது. மோடியின் மார்பின் எப்போதும் அவரது தாமரைச் சின்னம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

குஜராத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மோடி மாற்றினார் என மோடியின் பரப்புரைக் குழுவினர் பரப்புரை செய்தனர். குஜராத்தை மாற்றிய மோடியை இந்தியாவை மாற்ற அனுமதியுங்கள் என்பது அவர்களின் முக்கிய பரப்புரை வாசகமாக இருந்தது. ஆனால் இந்தியப் புள்ளி விபரங்களை வைத்து இதை உறுதி செய்ய முடியவில்லை. பிரித்தானியாவைச் சேர்ந்த இரு பொருளாதார நிபுணர்கள் குஜராத்திலும் பார்க்க மும்பாயைத் தலைநகராகக் கொண்ட மகராஸ்ட்ராவும் தமிழ்நாடும் பொருளாதாரத்தீல் சிறப்பாகச் செயற்படுகின்றன என்கின்றனர். குஜராத் வறுமை ஒழிப்பில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. பழங்குடியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் மிகவும் வறியவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் இறப்பு விகிதம் குஜராத்தில் அதிகமாக இருக்கிறது, கிராமப்புறத்தில் 67 விழுக்காடு மக்களுக்கு கழிப்பிட வசதிகள் இல்லை. குஜராத்தில் தொழிலாளர்களுக்கான ஊதியமும் கீழ் நிலையில் இருக்கின்றது

மோடியும் பாரதிய ஜனதாக் கட்சியும் ஊழலற்றவர்கள் எனப் பரப்புரை செய்யப்படுகின்றது. பாரதிய ஜனதா கட்சித் தலைவராக 2001-ம் ஆண்டு பங்காரு லஷ்மண் பதவி வகித்தார். அப்போது தெஹல்கா ஊடகமானது இங்கிலாந்து ஆயுத கம்பெனி பிரதிநிதிகள் போல பங்காரு லஷ்மணைச் சந்தித்து ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான பேரத்தை நடத்தியது. அதை அப்படியே வீடியோவாகவும் படம் பிடித்தது. அதில் டெகல்கா குழு கொடுத்த ரூ1 லட்சம் லஞ்சப் பணத்தை பங்காரு லஷ்மண் வாங்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. பாஜகவின் பாபு போக்கிரியா லைம்டோன் சுரங்க வழக்கில் 54 கோடி கொள்ளையடித்த குற்றச்சாட்டும் உண்டு.

விக்கிலீக்ஸையும் விட்டு வைக்க வில்லை. 
மோடி ஊழற்றவர்.இந்தியாவில் நேர்மையான ஒரே அரசியல்வாதி’ என அமெரிக்கத் தூதுவர் அமெரிக்க அரசுக்கு செய்தி அனுப்பியதாக விக்கிலீக்ஸ் வெளிவிட்ட செய்தி என மோடியின் பரப்புரை குழு ஒரு செய்தி வெளிவிட்டது பின்னர் விக்கிலீக்ஸ் தாம் அப்படி எதையும் வெளிவிடவில்லை என மறுத்தது

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது மோடி அங்கு சென்று வெள்ளத்தில் மாட்டியவர்களை மீட்டார் என ஒரு பொய்ச் செய்தி வெளிவந்தமைக்கு மோடியின் பொய்ப் பரப்புரைக் குழுவினர் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியத் தேர்தலில் பரப்புரைகளின் உண்மைத் தன்மையை அல் ஜசீராவின் செய்தித் தலைப்பு படம் பிடித்துக் காட்டுகின்றது:
Paid news clouds India elections  - விலைகொடுத்த செய்திகள் இந்தியத் தேர்தலை மூடுகின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...