Friday 11 September 2015

சீனாவின் இணையவெளித் திருட்டுக்கு அமெரிக்காவின் பதிலடி.

அமெரிக்காவின் வர்த்தக இரகசியங்களைத் திருடிய சீன நிறுவனங்களுக்கும் தனியார்களுக்கும் எதிராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் முன்பு எப்போதும் இல்லாத பொருளாதாரத் தடைப் பொதி ஒன்றை உருவாக்குகின்றது. இது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றது.

இணையவெளிப் பொருளாதாரத் திருட்டுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியம் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் அணுவலு இரகசியங்களில் இருந்து வலையங்களின் தேடுபொறிவரை பல வர்த்தக இரகசியங்களை அமெரிக்காவில் இருந்து சீனர்களால் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

அமெரிக்க தொழில்நுட்பங்களை சீனா இணைய வெளியில் ஊடுருவித் திருடுவதால் அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பீடும் இரண்டு மில்லியன் பேருக்கான வேலைகள் இழக்கப்படுவதாகவும் அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.

சீனப் அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளும் தறுவாயில் இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது பிரச்சனைக்கு உரியதாயும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப் படுகின்றது. ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் அத்து மீறல்கள் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சீனாவில் இருந்து தொடர்ச்சியாக இணைய வெளியூடாக அமெரிக்க வர்த்தக மற்றும் படைத்துறை இரகசியங்களை சீனா திருடுவதாக உறுதியாக நம்பும் அமெரிக்கா மிகவும் விசனமடைந்துள்ளது எனபதை சீன அதிபரின் பயணத்தின் முன்னர் செய்யபடவிருக்கும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான அறிவிப்பு எடுத்துக் காட்டுகின்றது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இணையவெளித் திருட்டுக்கு எதிராகத் தண்டனைகள் வழங்கும் தனது நிறைவேற்று ஆணையைப் பிறப்பித்திருந்தார். அமெரிக்க அதிபர் வழங்கும் நிறைவேற்று ஆணை ஒரு சட்டமாகும்.
அமெரிக்கத் திறைசேரிச் செயலர், சட்டமா அதிபருடனும் வெளியுறவுத் துறைச் செயலருடனும் கலந்து ஆலோசித்து பொருளாதாரத் தடைகளைச் செய்யலாம் என நிறைவேற்று ஆணை குறிப்பிடுகின்றது.
இந்த நிறைவேற்று ஆணையின் முதல் தண்டனையாக சீனாவின் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் எதிரான பொருளாதாரத் தடையாக அமையப் போகின்றது என எதிர் பார்க்கப் படுகின்றது. அவர்களது சொத்துக்களை முடக்குதல் வியாபார நடவடிக்கைகளை இரத்துச் செய்தல், போன்றவை தண்டனைகளாக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இணைய வெளியூடாக அமெரிக்க இரகசியங்களைத் திருடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத தடை விதிப்பதுடன் அரசுறவியல் நடவடிக்கைகள், வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், சட்ட நடவடிக்கைகள் போன்றவையும் செய்யப்படலாம். அமெரிக்காவின் பெறுமதி மிக்க இரகசியங்களைத் திருடியவர்கள் தேச எல்லைகள் என்னும் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்து நின்று தப்ப முடியாது என்றார் பராக் ஒபாமா. மேலும் அவர் எமது தேசத்தின் சொத்துக்களை இணைய வெளியூடாகத் திருடுவுபவர்களுக்கு எதிராக எடுக்கப் படும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படும் என்றார்.
அமெரிக்க உளவுத் துறையினரின் கருத்துப்படி சீனா மட்டுமல்ல அமெரிக்க இரகசியங்களைத் திருடுவது. ஆனால் பெரும்பாலான திருட்டுக்கள் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமெரிக்கா சீனப் படைத்துறை அதிகாரிகளின் மீது இணையவெளித் திருட்டுக்காக நிதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளது. 2015-ம் ஆண்டு சீனாவின் Tianjin University இன் மூன்று பேராசிரியர்கள் மீது அமெரிக்கா இணையவெளித் திருட்டுக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு சீனாவின் பதிலடி எப்படி இருக்கும் என்பது பற்றியும் அமெரிக்காவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் அரச ஊழியர்கள், பொதுவுடமைக் கட்சிச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பெரும்பாலானோர் தமது தகவற் பரிமாற்றத்திற்கு SMS எனப்படும் குறுந்தகவல்களிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். 2012-ம் ஆண்டு சீனாவில் 90 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. சீனக் கைப்பேசி நிறுவனங்களின் கணனிகளை அமெரிக்கா ஊடுருவி எல்லா குறுந்தகவல் பரிமாற்றங்களையும் திருடிவிட்டதாக எட்வேர்ட் ஸ்னோடன குற்றம் சாட்டுகிறார்.

உலகில் முன்னணி நாடுகள் யாவும் இணையவெளியூடாக தகவல் திருட்டிலும், உளவு பார்த்தலிலும், தக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளன. இணையவெளிப்படைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இதில் அதிக அளவு ஈடுபட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் உலகக் காவற்துறை நிலை தகர்கப்பட்டால் சீனா கூட முறையான உலக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என்பதை சீனாவும்

சீனாவும் இரசியாவும் இணைந்து அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் பலவற்றின் கணினிகளை ஊடுருவி அமெரிக்க அரசுறவியலாளர்கள் மற்றும் உளவாளிகள் பற்றிய பல தகவல்களைத் திரட்டியுள்ளன. விமானச் சேவைகளின் கணினிகளை ஊடுருவி அதன் பயணிகளின் விபரங்களையும் பயண விபரங்களையும் திரட்டி அதில் அரசுறவியலாளர்கள் யார் உளவாளிகள் யார் என்பது பற்றியும் அவர்களது நடமாட்டம் பற்றியும் தகவல்களை இரசியாவும் சீனாவும் பெற்றுக் கொண்டதுடன் இரு நாடுகளும் தாம் திருடிய தகவல்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறியும் கொண்டன என லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளிவிட்டிருந்தது. அதே பத்திரிகை. ஜுனேய்ட் ஹுசேய்ன் என்ற ஒரு தனிநபர் அமெரிக்காவின் 1300அமெரிக்காவின் படைத்துறை மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள், முகவரிகள் போன்றவற்றை இணையவெளி ஊடுருவல் மூலம் திரட்டி பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து அவர்களைக் கொல்லும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது

நாடுகளுக்கு இடையிலான மோதல்கள், தரை, கடல், விண்வெளி ஆகியவற்றில் மட்டுமல்ல இணைய வெளியிலும் நடக்க விருக்கின்றது.

Monday 7 September 2015

அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அடக்க முடியாதா?

சீனாவின் பங்குச் சந்தையின் வீழ்ச்சியும் அதன் நாணயத்தின் மதிப்பிழப்பும் சீனாவில் வேதியியல் பொருட்களின் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தும் சீனா உலகின் முதல் தர நாடாக உருவெடுக்குமா என்ற ஐயத்தை உருவாக்கியது. அத்துடன் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் அடக்கப் பட முடியாத ஒன்றா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. சீனா சோவியத் ஒன்றியம் போல் சரியப் போவதுமில்லை, ஜப்பானைப் போல் தொடர் பொருளாதார மந்த நிலையில் அமிழ்ந்திருக்கப் போவதுமில்லை. ஆனாலும் சீனாவின் புள்ளி விபரங்கள் மீதான நம்பகத் தன்மையின்மை அதன் பொருளாதாரத்தின் மீதும் படை வலு மீதும் நம்பகத் தன்மையின்மையை ஏற்படுத்துகின்றது.

பலர் ஏறிச் சறுக்கி விழுந்தனர்
1950களில் சோவியத் ஒன்றியம் ஐக்கிய அமெரிக்காவை மிஞ்சுவதுடன் அதை அடக்கும் என  எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சோவிய ஒன்றியம் இன்று இல்லை. அமெரிக்கா இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றது. 1980களில் ஜப்பான் அமெரிக்காவை வாங்கப் போகின்றது எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானியப் பொருளாதாரம் இன்று மிகவும் சிக்கலான நிலையில் இருக்கின்றது. 1990களில் யூரோ நாணயம் அமெரிக்க டொலரை ஓரம் கட்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இன்று யூரோ நாணயம் பெரும் சிக்கலில் இருக்கின்றது. 2000-ம் ஆண்டில் இருந்து 2020இற்கும் 2050இற்கும் இடையில் சீனா பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் அமெரிக்காவை முந்தி விடும் என எதிர்பார்க்கப் பட்டது. இப்போது சீனா தவிக்கின்றது.

அமெரிக்காவிற்கு பொருளாதாரச் சவால்
அமெரிக்காவிற்கான பொருளாதாரச் சவால் ஐரோப்பிய ஒன்றியம், பிரிக்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தும் சீனாவிடமிருந்து தனியாகவும் விடுக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள் தற்போது தொடர் பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன.  மேற்கு ஜேர்மனியும் பிரான்ஸையும் தவிர்ந்த ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை எதிர்ப்பதற்குத் திராணியற்றன. அவை அமெரிக்காவை பகையாளி ஆக்குவதிலும் பார்க்க பங்காளியாக்கவே விரும்புகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போலாந்து சிறப்பான முறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அதற்கு அமெரிக்காவின் நட்பு அவசியம். பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியில் நோய் வாய்ப்பட்டவையாகவே இருக்கின்றன. 

இரசியா:- கழுதை தொடர்ந்து தேய்கின்றது

இரசியா தனது இருப்பிற்கு பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை நூறு அமெரிக்க டொலர்களுக்கும் மேலாக இருந்தால் மட்டுமே இரசியாவால் பொருளாதார ரீதியாகாத் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவின் மொத்த வெளிநாட்டுக்கடன் 410 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 610 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனை இரசியா அடைக்க வேண்டியுள்ளது. கடந்த மே மாதத்தின் பின்னர் இரசிய நாணயம் 23 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வெளிநாட்டுக் கடன் பளு இரசிய நாணயமான ரூபிளில் பெரிதளவு அதிகரித்துள்ளது. இரசியாவை புட்டீன் தனது சோவியத் கால நண்பர்களை முன்னணிப் பதவியில் அமர்த்தி தனது இருப்பை உறுதி செய்து கொண்டுள்ளார். இவர்கள் ஒரு மாஃபியாக் கும்பல் போல் செயற்படுகின்றார்கள். புட்டீனின் இந்த நட்பு வட்டத்தைக் குறிவைத்து அமேரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை தீவிரமாக்கியுள்ளன. இரசியாவின் பல பிராந்தியங்கள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடான இரசியா துண்டாடப்படும் அபாயம் உண்டு.

செல்வந்தராக முன்னர் வயோதிபரான சீனா
சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புதான் சீனாவின் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. சீனாவின் முதியோர் தொகை அதிகரித்துக் கொண்டும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் போகின்றது. இது சீனாவில் சமூக நலன் செலவுகளை அதிகரிக்கின்றது அரச வரி வருமானத்தைக் குறைக்கின்றது. கடினமாக உழை உழை என்று உழைத்து செல்வந்தன் ஆக முன்னம் வயோதிபன் ஆன கதை தான் சீனாவின் கதை. அமெரிக்காவிற்கு சவால் விடுவதாயின் சீனா ஐந்து விழுக்காட்டிற்கு மேல் வளர வேண்டும். சீனப் பொருளாதாரத் தகவல்கள் உண்மையாகக் கணிக்கப்பட்டால் அது ஒரு வளர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றது.

இந்தியா:- மக்களைப் பெற்ற மகராசிக்கு வழிகாட்ட ஆளில்லை
இந்தியாவில் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகை அதிக இளையோரைக் கொண்டதாகும். ஆனால் சீனாவைப் போல் இந்திய உற்பத்தி செய்த பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்வதில்லை. மூலப் பொருட்களையே பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. தற்போது உள்ள முன்னணி நாடுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கின்றது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் சிவப்பு நாடாவினாலும் ஊழல் என்னும் சங்கிலியாலும் கட்டப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் பல தாம் கொடுத்த கடன்களைத் திருப்பிப் பெறமுடியாத நிலையில் உள்ளன. இதனால் பாதிக்கப் பட்ட வங்கிகளுக்கு உதவி செய்ய இந்திய மைய அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடுகின்றது. இந்திய வங்கிகள் தமது கடன்களில் 4.3 விழுக்காட்டை அறவிட முடியாமல் இருக்கின்றது இந்த அறவிட முடியாக் கடன் விழுக்காடு சீனாவில் 1.1ஆகவும் அமெரிக்காவில் இரண்டாகவும் இருக்கின்றது. வங்கிகள் கடன் வழங்க தயங்குவதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கு சவால் விடும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களிடமோ அல்லது கொள்கை வகுப்பாளர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.

சீனாவின் படைத்துறைச் சவால்
சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சியவை சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும்.  ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3  ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.

கடலாளும் அமெரிக்கா
அமெரிக்கக் கடற்படையினர்  MQ-4C Triton unmanned aircraft system என்னும் ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர்.  அமெரிக்கா உருவாக்கும் MQ-4C Triton unmanned aircraft system ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் விமானிகள் ஓட்டும் கண்காணிப்பு விமானங்களுடன் இணைந்து செயற்படக் கூடியவை. 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும்  மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும். 50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical/infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும். ஐக்கிய அமெரிக்கா தனது ஆங்கில மொழி பேசும் நட்பு நாடுகளான கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக் கடற்பரப்பை ஆள்கின்றது எனச் சொல்லலாம். அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலுடன் ஒப்பிடுகையில் இரண்டு தலை முறைகள் முன்னேறியவையாக இருக்கின்றன.

நிதி நெருக்கடியும் ஆதிக்கப் புறத்திறனீட்டமும் (Outsourcing)

அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கான உள்ளகத் தடையாக இருப்பது அதன் அரச நிதிப் பற்றாக் குறை. இதை அமெரிக்கா தனது கேந்திரோபாய நட்பு நாடுகள் மூலம் நிவர்த்தி செய்கின்றது. அமெரிக்கா தான் நேரடியாகப் போரில் ஈடுபட்டால் அரச செலவு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு தனது போரை புறத்திறனீட்டம் (Outsourcing) செய்கின்றது. அந்த நாடுகள் போருக்குத் தேவையான  படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இது அமெரிக்காவின் வருமானத்தை அதிகரிக்கின்றது. சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா ஒத்துழைப்புச் சபை நாடுகள் யேமனிலும் ஈராக்கிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரைப் புரிகின்றன. அதற்காக பெருமளவு படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இதே போல் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் நைஜீரியா, சோமாலியா, எரித்தீரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகின்றன. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியா பெரும் கடன் பளுவுடன் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது உலகின் பல நாடுகளைக் கைப்பற்றியது. பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியாவின் கடன் பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக இருந்தது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் போர் புரிந்து கொண்டிருக்கையில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 80 விழுக்காடு மட்டுமே. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 280 விழுக்காடு ஆகும்.

வலுவுள்ள எதிரியில்லை
1862-ம் ஆண்டே ஐக்கிய அமெரிக்கா உலகின் செல்வந்த நாடாகி விட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத்திலும், படைவலுவிலும் உலகின் முதல்தர நாடாக உருவெடுத்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவை அமெரிக்காவில் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவாலாக இருந்தது ஆனால் அதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லை. சோவியத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி ஒரு போதும் அமெரிக்காவின் உற்பத்தியின் பாதியைக் கூட எட்டியதில்லை. சீனா அமெரிக்கா அளவு பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தாலும் அது பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் இரசியா, கிழக்கில் தென் கொரியாவும் ஜப்பானும், தெற்கில் இந்தியாவும் வியட்னாமும் மேற்கில் வலுவற்ற சிறு நாடுகள். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு. இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும். இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கா ஒழித்துக் கொண்டிருக்கின்றது. தாய்வான் அமெரிக்காவின் ஒரு நிரந்தர விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கின்றது. அமெரிக்காவைச் சூழ உள்ள நாடுகள் எல்லாம் வலுவற்ற நாடுகளே. பிரச்சனைக்குரிய நாடாக இருந்த கியூபாவூடன் அமெரிக்கா தனது உறவைச் சீராக்கி வருகின்றது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிற்கு சவால் விடுக்கக் கூடிய ஒரு படைத் துறைக் கூட்டமைப்பு உருவாகும் நிலை அண்மையில் இல்லை. இரசியாவும் சீனாவும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் சூழ்நிலையும் அண்மையில் இல்லை. இதனால் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் இன்னும் சில ஆண்டுகள் தொடரப் போகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...