Tuesday 9 March 2010

இலங்கையில் நிருபாமா ராவோட ராவுகள்


காந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்துக் கொண்ட ஒரு குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையோ அல்லது பார்பனர்களின் கட்டுப்பாட்டில் இந்திய மத்திய அரச அலுவலகங்களின் தென்மண்டலம்(South Block) இருக்கும் வரையோ தமிழர்கள் இந்தியாவை நம்பவும் முடியாது, எந்த நன்மையும் இந்தியாவால் தமிழர்களுக்குக் கிடைக்காது.

இப்படி இருக்கும் போது நிருபாமா ராவ் அவர்கள் இலங்கைக்கு வந்து சில இரவுகளைக் கழித்துச் சென்றுள்ளார். இலங்கையில் சுனாமி தாக்கியபோது இலங்கையில் இந்தியத் தூதுவராகக் கடமையாற்றியவர் நிருபாமா ராவ். பலநாடுகள் இலங்கைக்கு உதவி செய்தன. சில நாடுகள் தமது உதவியில் குறிப்பிட்ட தொகை தமிழர்களுக்குச் சென்று சேரவேண்டும் என்ற நிபந்தனையுடன் தமது உதவியை வழங்கின. அப்படி ஒரு நிபந்தனையை இந்தியா இலங்கைக்கு விதிக்குமா என்று கேட்டபோது இலங்கைக்கு நாம் கொடுக்கும் உதவியை அவர்கள் தங்கள் விருப்பப்படி பாவிக்கலாம் என வெடுக்கெனவும் திமிராகவும் பதிலளித்தவர் இந்த நிருபாமா ராவ். அவர் அப்போது சுனாமியால் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு என்று எந்த சிறப்பு உதவிகளையும் செய்யவில்லை. இப்படிப் பட்ட நிருபாமா ராவ் தான இப்போது இலங்கை வந்துள்ளார்.

துள்ளிக் குதித்த கைக்கூலிகள்
அவர் வந்ததுவிட்டார்; தமிழர்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப் போகிறார்; இலங்கை அரசை தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்கும்படி வற்புறுத்தப் போகிறார்; என்று இந்தியக் கைக்கூலி ஊடகங்கள் ஆருடம் கூறி மகிழ்ந்தன.

குமுறிய சிங்களப் பேரின வாதம்.
வடக்குக் கிழக்கை நிருபாமா ராவ் இணைக்கப் போகிறார்; அது பிரிவினைக்கு வழிவகுக்கும்; நாடு பிரிபட நாங்கள் விடமாட்டோம் என்று ஜேவிபி கூக்குரலிட்டது.

இந்திய "ஜம்பம்" பலிக்காது.
இலங்கையில் போர் முடிந்த பின் சர்வ தேச அரங்கில் இலங்கையின் செல்வாக்கு உயர்ந்துவிட்டது; அதனால் நிருபாமா வந்து இன்கு ஒன்றும் சாதிக்கமுடியாது; இந்தியாவால் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது; என்றது ஒரு சிங்கள ஊடகம். முள்ளிவாய்க்காலில் ஆற்றை கடந்தாகிவிட்டது இனி நீயாரோ நான் யாரோ!

பிரித்தானியப் பாராளமன்றத்துக்குள் பிரித்தானியப் பிரதமர் வருகையுடன் தமிழ் மக்கள் உலகத் தமிழர் பேரவை அங்குரார்பணம் செய்து வைத்தமை இலங்கையை ஆத்திரமடைய வைத்தது; இந்தியாவைச் சிந்திக்க வைத்தது; இந்தியாவின் அச்சிந்தனையே எதிரொலியாகவே நிருபாம ராவ் இலங்கை வருகிறார்; என்றது சிங்கள நாளேடான லங்காதிப.

குறுகுறுக்கும் குற்றமுள்ள நெஞ்சம்.
நிருபாமா ராவின் இலங்கைப் பயணம் நீண்டகாலம் திட்டமிடப்பட்டது அல்ல. அவர் வரும்போது அவருடன் அரசியல் யாப்பில் வல்லுனர்களோ அல்லது வேறு உயர் ஆலோசகர்களோவரவில்லை. கச்சதீவுவரை நீண்ட சீனப் பிரசன்னம், சர்வதேச தமிழர் பேரவையின் அன்குரார்பணம், ஐக்கிய நாடுகள் சபையில் செயலர் இலங்கை தொடர்பாக ஆலோசகர்களை நியமித்தமை அவரது இலங்கைப் பயணத்தைத் தூண்டியிருக்கலாம். போர்குற்ற விசாரணை வந்தால் அதில் இந்தியப் பங்களிப்பும் வெளிவரும் என்றபயம் இந்தியாவிற்கு இருப்பது வெளிப்படை. சனல்-4 தொலைக்காட்சி தமிழ் இளைஞர்களைக் கொல்லும் காணொளியை வெளியிட்டவுடன். இந்திய வெளிவிவகார அமைச்சர் உடன் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டது சம்பந்தமானதா அல்லது இந்தியப் படையினர் போரில் நேரடியாகப் பங்கு கொண்டு செய்த கொடுமைகளின் காணொளிகள் ஏதாவது உள்ளதா என்பதை அறியவா என்று அவர் சொல்லவில்லை. அந்த விசாரணையின் முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு தன்னை விட்டால் வேறுகதியில்லை என்ற நிலையை உறுதி செய்து தனது சிறு விரலுக்குக் கீழ் தமிழர்களை வைத்திருக்க விரும்பும் இந்தியாவிற்கு தமிழர்களுக்கு ஆதரவாக வேறு நாடு ஒன்று வருவதை சகிக்கமுடியாது.


தமிழ்த் தேசியக் கூத்தமைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்(சிதைந்து போன) இந்திய நிருபமா ராவை சந்தித்து பேச்சு நடாத்தினர். இப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். (செல்வம் அடைக்கலநாதனுக்கு என்ன நடந்ததோ?)

நிருபாமா தம்மைச் சந்தித்ததாகக் கூறிய (சிதைந்து போன) தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியும் இன்னமும் முகாமில் உள்ளவர்கள் பற்றியும் முகாமில் இருந்து வெளியேறி இன்னமும் அவல நிலையில் வாழும் மக்கள் பற்றியும் அவர் தம்முடன் கதைத்தாகக் கூறினார். ஆனால் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் உதவிகள் தமக்கு திருப்தி அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரு தினங்களுகு முன் தெரிவித்துள்ளார்.

காரணமின்றிச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் தமிழர்களைப் பற்றி இரு தரப்பில் எவரும் கவலைப்படவில்லை. அப்படிச் சிறையில் இருப்பவர்கள் தமிழ்த் தேசியத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் இருதரப்பும் அவர்கள் மீது அக்கறை காட்டவில்லைப் போலும்.

"பொழைப்பு நாறிவுடும்"
இந்தியா தனது நலனை ஒட்டியே இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை காட்டும் என்றும் சுரேஸ் கூறினார். இந்தியா தனது பிராந்திய நலனை ஒரு குடும்பத்தின் நலனுக்காகவும் அதன் ஆலோசகர்களின் சாதிய நலன்களுக்காகவும் என்றோ அம்பாந்தோட்டையில் கோட்டை விட்டு விட்டது என்ற உண்மையை வெளியே சொன்னால் சுரேஸின் "பொழைப்பு நாறிவிடும்". இந்தியா தமிழர்களைச் சிங்களவர்கள் அடிமைகளாக வைத்திருப்பதையே விரும்புகிறது என்பதையும் அது அதன் பேரினவாதக் கொள்கைக்கு உகந்தது என்பதையும் சுரேஸும் நன்கறிவார். கூட்டமைப்பை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்

செல்லப் பிள்ளையான், செல்லாக் காசான கருணா.
நிருபாமா கருணாவைச் சந்திக்கவில்லை. பிள்ளையானைச் சந்தித்த நிருபாமா அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்வையிட்டு அவரது கட்சிக் கொள்கைகளை எப்படி முன்னேற்றுவதற்கு இந்தியா உதவி செய்யும் என்று கூறினாராம். பிள்ளையானை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.

விடுதலைப் புலிகளை சிறீலங்கா அரசு கடந்த மே மாதம் முறியடித்துள்ள போதும் அவர்கள் இந்தியாவுக்கு உறுதியளித்தபடி அரசியல் தீர்வை இதுவரை முன் வைக்கவில்லை. மஹிந்தா வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பான தகவலை இந்திய மத்திய அரசு நிருபாமா மூலம் தெரிவிக்கவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மஹிந்தாவைச் சந்தித்த நிருபாமா என்ன கதைத்தார் என்பது தொடர்பாகச் செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் மஹிந்தவை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமும் தன்னை நிருபாமா ராவ் சந்தித்தார். அவரையும் டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.

அவளோட ராவுகளில் தொண்டமானுக்கு இடம் இல்லை

நிருபாம ராவ் தனது இலங்கைப் பயணத்தின் போது மலையகத் தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை. மலையத் தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லை என்றதால் சந்திக்கவில்லையோ! அல்லது அவர்கள் ஒரு அமைப்பை பிரித்தானியப் பாராளமன்ற வளாகத்துள் அங்குரார்பணம் செய்யாததோ கரணமாக இருக்கலாம்.

மீண்டும் ஒரு திம்பு
திம்புப் பேச்சு வார்த்தையில் சிங்களவர் தரப்பில் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனேயின் சகோதரரும் தமிழர் தரப்பில் கணக்கற்றவர்களும் பங்குபற்றினர். அப்போது தமிழர்களில் பலதரப்பாகப் பிரித்து வைத்திருந்து சகலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது இந்தியா. பின்னர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தது. இப்போது அதே பாணியை இந்தியா கையாள்கிறது. கருணா, பிள்ளையான், சங்கரி, டக்ளஸ், சித்தார்த்தன், வரதராஜப் பெருமாள், கூட்டமைப்பு, தமிழ் காங்கிரஸ் இப்படிப் பலர் ஒரு பக்கமும் மறுதரப்பில் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் (ஓட்டைவாயன்)கோத்தபாய மறுபக்கமும் பேச்சு வார்த்தை நடத்துவார்களா? தமிழர்கள் கதை மீண்டும் முதலாம் அத்தியாயமா? ஆனால் மீண்டும் மேலுள்ளமுதலாம் பத்தியை பார்ப்போம்:
காந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்துக் கொண்ட நேரு குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையோ அல்லது பார்பனர்களின் கட்டுப்பாட்டில் இந்திய மத்திய அரச அலுவலகங்களின் தென்மண்டலம் (South Block)இருக்கும் வரையோ தமிழர்கள் இந்தியாவை நம்பவும்முடியாது, எந்த நன்மையும் தமிழர்களுக்குக் கிடைக்காது.

2 comments:

Anonymous said...

செல்லப் பிள்ளையான் செல்லாக் காசு கருணா மிக நன்று...

Anonymous said...

Thanks for the article,

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...